மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 10 முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ரொக்கப் பணம் (Cash) செலுத்தும் முறை முற்றிலும் நிறுத்தப்படுகிறது. சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும், பயண நேரத்தைக் குறைத்து போக்குவரத்தைச் சீராக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வாகன ஓட்டிகள் ஃபாஸ்டேக் (FASTag) அல்லது யுபிஐ (UPI) போன்ற டிஜிட்டல் முறைகள் மூலம் மட்டுமே கட்டணத்தைச் செலுத்த முடியும்.
புதிய விதிகளின்படி, ஒரு வாகனத்தில் ஃபாஸ்டேக் இல்லையென்றால், ஓட்டுநர் யுபிஐ மூலம் பணம் செலுத்த அனுமதிக்கப்படுவார். இருப்பினும், அவ்வாறு செலுத்தும்போது வழக்கமான கட்டணத்தை விட 1.25 மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று அமைச்சகம் எச்சரித்துள்ளது. மேலும், சுங்கக் கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தால், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு மின்னணு அறிவிப்பு (e-notice) அனுப்பப்படும். இந்த நிலுவைத் தொகையை மூன்று நாட்களுக்குள் செலுத்தத் தவறினால், அத்தொகையைப் போல இரு மடங்கு அபராதமாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தவறான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி சுங்க விலக்கு பெறுவதைத் தடுக்கவும் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி அடையாள அட்டையைக் காண்பிப்பதன் மூலம் மட்டும் சுங்க விலக்கு பெற முடியாது; மாறாக, தகுதியுள்ள நபர்கள் கட்டாயம் “விலக்கு அளிக்கப்பட்ட ஃபாஸ்டேக்-களை” (Exempted FASTags) வைத்திருக்க வேண்டும். இந்தச் சலுகை அரசு அதிகாரிகளின் பதவி மற்றும் அரசு வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அரசு ஊழியர்கள் பயணிக்கும் தனியார் வாகனங்களுக்குப் பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் முறை மாற்றமானது தேசிய நெடுஞ்சாலைகளில் வெளிப்படைத்தன்மையையும் வேகத்தையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
