தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளன. வழமையாக ஒவ்வொரு மாதத்தின் இறுதி வாரத்திலும் சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் கூட்டம் நடைபெறவில்லை. தற்போது தேர்தல் முடிந்து மே மாதமும் நிறைவடையும் நிலைக்கு வந்துவிட்ட போதிலும், இந்த மாதத்திற்கான மாமன்றக் கூட்டமும் கூட்டப்படாமல் தள்ளிப்போயிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பு வரை திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இடதுசாரிகள், ஐயுஎம்எல் உள்ளிட்ட முக்கியக் கட்சிகள், இந்தத் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அதுமட்டுமன்றி, புதிய அரசில் விசிக, ஐயுஎம்எல், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆட்சி அதிகாரத்திலும் பங்கெடுத்துள்ளன. தங்களின் கூட்டணிக் கட்சிகள் இப்படி தவெக பக்கம் சாய்ந்து ஆட்சியைப் பிடித்திருப்பது திமுக தரப்பில் கடும் அதிருப்தியையும் அரசியல் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சிப் பணிகள் அனைத்தும் பெரிய அளவில் முடக்கமடைந்து தேங்கிக் கிடக்கின்றன. மாமன்றக் கூட்டம் கூட்டப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டால் மட்டுமே புதிய திட்டங்களும் வார்டு பணிகளும் வேகம் பெறும். சென்னையில் கணிசமான அளவில் திமுக கவுன்சிலர்களே தற்போதும் பதவியில் நீடிப்பதால், புதிய அரசுடன் இணக்கமான சூழல் ஏற்படுமா? மாநகராட்சி கூட்டம் எப்போது நடக்கும்? என்ற கேள்விகள் பரவலாக எழுந்தன.
இந்நிலையில், இன்று ரிப்பன் மாளிகையில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்திருந்த சென்னை மேயர் பிரியாவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்கு மிகவும் ஓபனாக பதிலளித்த மேயர் பிரியா, “தற்போது புதிய அரசு பொறுப்பேற்று செயலாற்றி வருகிறது. எனவே, மே மாதத்திற்கான சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை” என்று கூறினார். மேலும், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திப்பீர்களா என்கிற கேள்விக்கு, “தமிழக முதல்வரை இப்போதைக்கு சந்திக்கும் வாய்ப்பு ஏதுமில்லை” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். மேயரின் இந்த அதிரடிப் பதில் தமிழக அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.
