தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாட்டின் நகர்ப்புற வளர்ச்சிக்காக ஒன்றிய அரசின் ‘அர்பன் சேலஞ்ச் ஃபண்ட்’ (UCF) திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ. 7,500 கோடி நிதிக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த நிதியுதவியானது, முதலமைச்சர் விஜய் அறிவித்த ‘முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற உருமாற்றத் திட்டம்’ (Chief Minister’s Integrated Urban Transformation Mission – CMIUTM) என்ற பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் முக்கிய நகரங்களின் உள்கட்டமைப்பை சர்வதேசத் தரத்திற்கு மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த முக்கிய நிதியொதுக்கீட்டின் மூலம், சென்னையின் வாழ்வாதார நதிகளான கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய மூன்று முக்கிய நீர்வழிகளை மீட்டெடுத்து மறுசீரமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. அத்துடன், தமிழக நகர்ப்புறங்களில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகம், 100% கழிவுநீர் இணைப்பு வசதி, நவீன சாலைகள், முறையான மழைநீர் வடிகால் அமைப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் இந்த தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2031-ஆம் ஆண்டிற்குள் 5 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய முக்கிய நகரங்களில் நவீன பூங்காக்கள், திறந்தவெளி பொது இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இவற்றுடன் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் விலங்கினக் கட்டுப்பாடு (Animal Birth Control) மையங்கள் அமைக்கப்படவுள்ளதால், பசுமை நகரங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்புடன் தமிழ்நாட்டின் நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
