“யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுறீங்க?”…. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கடுப்பு… அமைச்சர் நிர்மல்குமாருக்கு அவையில் செக்…..!

By Nanthini on ஆவணி 18, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிக்கு, தங்கள் கால்நடைகளைத் தேடிச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 தமிழர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மான் வேட்டையாட வந்ததாகக் கூறி கர்நாடக வனத்துறையினர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது. ஏற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டு ஆந்திராவின் சேஷாசலம் வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் வடு ஆறாத நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் பக்கத்து மாநில வனத்துறையினரால் 23 தமிழர்கள் உயிரிழந்திருப்பது மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.

இச்சம்பவத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கோரியும் தமிழக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் திமுக சார்பில் பேசுகையில், கால்நடைகளைத் தேடிச் சென்ற அப்பாவி விவசாயிகள் போலி என்கவுண்டர் மூலம் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், இது தெளிவான மனித உரிமை மீறல் என்பதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

   

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக சார்பில் பேசுகையில், இரண்டு மாநில எல்லைப் பகுதியில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளதால், உண்மையை வெளிக்கொணர இந்த வழக்கை சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், கர்நாடக வனத்துறை அமைச்சர் இச்சம்பவத்தை தற்காப்பு நடவடிக்கை எனக் கூறி நியாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், தமிழக அரசு கர்நாடக அரசுடன் பேசி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி வரை கூடுதல் நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

   

விவாதத்தின் இறுதியில் பதிலளித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், தீர்மானத்தின் வரம்பைத் தாண்டி அரசியல் கருத்துக்களைத் தெரிவித்ததால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாகக் குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சரின் பேச்சைக் கண்டித்து அவை அமைதியைக் காத்தார். “சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அதைப் பற்றி மட்டுமே பேச வேண்டும்; தேவையற்ற பேச்சுகளை அனுமதிக்க முடியாது” என்று சுட்டிக்காட்டிய சபாநாயகர், அவையின் மரபைப் பேணி விவாதத்தை நிறைவு செய்தார்.