திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தவெக தலைவர் விஜய் தனது பரப்புரை வாகனத்தில் ரோடு ஷோ நடத்திக்கொண்டிருந்த போது, அந்த வழியாகத் திருமணம் முடிந்த கையோடு வந்த புதுமணத் தம்பதியினரை நேரில் கண்டார். உடனே அவர்களைத் தனது வாகனத்தின் மேலே ஏற்றி அழைத்து வருமாறு கூறினார். விஜயைக் கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த மணப்பெண், உற்சாக மிகுதியால் விசில் ஊதித் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
பரப்புரை வாகனத்தில் ஏறிய மணமக்கள் இருவரும் விஜய்யின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். நெகிழ்ந்து போன விஜய், மணமக்களின் கைகளை உயர்த்திப் பிடித்து உற்சாகமாக வாழ்த்துத் தெரிவித்தார். மேலும், அவர்களைத் தனது வாகனத்திலேயே சிறிது தூரம் ஊர்வலமாக அழைத்துச் சென்று சிறப்பித்தார். இந்தத் தற்செயலான சந்திப்பும், விஜய்யின் அன்பான அணுகுமுறையும் அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Thalapathy blessed a newlywed couple 😍 pic.twitter.com/KB4MNDfjn5
— Vijay Fans Trends (@VijayFansTrends) April 20, 2026
