தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் கடந்த 2023 செப்டம்பர் 15 அன்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட ‘மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மாதந்தோறும் 1 கோடியே 31 லட்சம் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும் இத்திட்டம், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி மற்றும் ஜார்க்கண்ட் போன்ற பிற மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழகத்தின் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
இதற்கிடையில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், தனது தேர்தல் வாக்குறுதியின்படி மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக அறிவித்திருந்தார். ஜூன் மாதத்திலேயே இந்த உயர்வு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிதி நெருக்கடி மற்றும் தற்போதைய சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக தற்போதும் ரூ.1,000 மட்டுமே தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
புதிதாகத் திருமணமாகி ரேஷன் கார்டு பெற்றவர்கள் மற்றும் தகுதியிருந்தும் விடுபட்டவர்கள் எனப் பலரும் புதிய விண்ணப்பங்களுக்காகக் காத்திருக்கும் சூழலில், இத்திட்டத்தில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தகுதியற்றவர்களை நீக்கிவிட்டு உண்மையான பயனாளிகளுக்குத் தொகை சென்று சேர்வதை உறுதிசெய்த பின்னரே, தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக இந்தத் திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படுவதோடு, மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனால் விரைவில் புதிய விண்ணப்பங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு, தகுதியான அனைத்துப் பெண்களுக்கும் இத்திட்டத்தின் பலன் முழுமையாகக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
