தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைக்காகக் காத்திருக்கும் மக்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. தேர்தல் பணிகள் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது 50,000 புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.
தென்காசியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இன்னும் ஓரிரு வாரங்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்குப் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி முறைப்படி தொடங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். எனவே, புதிய கார்டுகளுக்கு விண்ணப்பித்து நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
