தமிழகத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் அரசுச் சொத்துகளைச் திறம்படப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ‘தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம்’ என்ற புதிய பொதுத்துறை நிறுவனத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. ரூ.200 கோடிக்கு அதிகமான மதிப்பீட்டைக் கொண்ட அரசின் பெருந்திட்டங்கள் மற்றும் நவீன கட்டடப் பணிகளை விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்வது இக்கழகத்தின் முதன்மைப் பணியாகும். மேலும், மாநிலம் முழுவதும் பயன்படுத்தப்படாமல் சும்மா இருக்கும் அரசு நிலங்களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் அரசுக்கு நிரந்தர வருவாயைப் பெருக்கும் வகையில் வணிகரீதியாகவும் உள்கட்டமைப்பு ரீதியாகவும் மேம்படுத்தும் பொறுப்பும் இக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இப்புதிய கழகத்தின் வருகை, கட்டுமானத் துறையில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதோடு மட்டுமன்றி, தேசிய மற்றும் சர்வதேச அளவில் முன்னணித் தனியார் நிறுவனங்கள் கோரும் பெருவாரியான கட்டடக் கட்டுமான ஒப்பந்தங்களில் இக்கழகம் நேரடியாகப் போட்டியிட்டுப் பங்கேற்கும். இதன் மூலம், பொதுத்துறையின் மூலம் வருவாய் ஈட்டுவதுடன், சர்வதேசத் தரம் வாய்ந்த கட்டுமானத் தொழில்நுட்பங்களையும் உத்திகளையும் தமிழக அரசுத் திட்டங்களில் நேரடியாக நடைமுறைப்படுத்த வழிவகை ஏற்படும்.
