அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்த அமைப்பு, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பருவமழை தொடங்கிய முதல் நாளிலும், அதைத் தொடர்ந்து வந்த நாட்களிலும் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும். குறிப்பாக, அடுத்தடுத்த நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை மற்றும் சில இடங்களில் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதன் எதிரொலியாக, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும், கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை அகற்றும் பணிகளிலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் அரசுத் துறைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
