ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்… ஜூலை 15 முதல் புதிய IRCTC இணையதளம்…! அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கொடுத்த குட் நியூஸ்…!!

By Swetha on ஆனி 12, 2026

Spread the love

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடியபோது, மேம்படுத்தப்பட்ட புதிய IRCTC இணையதளம் ஜூலை 15-ஆம் தேதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார். இணையதளத்தில் உள்ள ‘கேப்ட்சா’ சிக்கல் மற்றும் தட்கல் முன்பதிவின் போது ஏற்படும் தொழில்நுட்பத் தடைகள் குறித்து மாணவர் ஒருவர் எழுப்பிய புகாரைத் தொடர்ந்து, அமைச்சர் உடனடியாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு 30 நாட்களுக்குள் புதிய இணையதளத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர உத்தரவிட்டார். தற்போது சுமார் 88 சதவீத ரயில் டிக்கெட்டுகள் இணையம் மூலமாகவே முன்பதிவு செய்யப்படுவதால், டிராஃபிக் அதிகமாக உள்ள நேரங்களில் இணையதளம் முடங்குவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட இந்த இணையதளத்தில் பயணிகளின் வசதிக்காகப் பல்வேறு நவீன அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. சர்வர் திறன் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளதால், ஒரே பார்வையில் அனைத்து வகுப்புகளின் இருக்கை விவரங்களையும், வெவ்வேறு தேதிகளுக்கான கட்டணங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். மேலும், தட்கல் முன்பதிவின் போது வங்கி OTP-களுக்காகக் காத்திருக்கும் சிரமத்தைத் தவிர்க்க ‘IRCTC இ-வாலட்’ மற்றும் உடனடிப் பணத்தைத் திரும்பப் பெற உதவும் நவீன கட்டண வசதிகளும், உள்நுழையாமலேயே PNR நிலையை அறிய உதவும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் “திஷா” சாட்பாட் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளன.

   

பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்தும் நோக்கில், இரு காரணி அங்கீகாரம் மற்றும் முறையான கேப்ட்சா சரிபார்ப்பு போன்ற அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இது அங்கீகரிக்கப்படாத முகவர்கள் அல்லது சட்டவிரோத மென்பொருட்கள் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்வதைத் தடுத்து, உண்மையான பயணிகளுக்கு முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்கிறது. இவற்றுடன் சேர்த்து, ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை புது தில்லியில் உள்ள மையக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள 800-க்கும் மேற்பட்ட IRCTC சமையலறைகளில் 2,394 செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.