அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நிலவு அமெரிக்காவுக்குச் சொந்தமானது என்ற தொனியில் “The Moon is ours” என்று தனது ‘டிரூத் சோஷியல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நிலவின் பின்னணியில் அமெரிக்கக் கொடி பறப்பது போல செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்பட்ட படத்தையும் அவர் இதனுடன் பகிர்ந்துள்ளார். சமீபகாலமாக AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் பல்வேறு விசித்திரப் படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் டிரம்பின் இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் பதிவு, விண்வெளி ஆர்வலர்களிடையேயும் உலக நாடுகளிடையேயும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.
நிலவு சர்ச்சைக்கு மத்தியில், அமெரிக்காவின் ‘நியூ மெக்சிகோ’ மாகாணத்தின் பெயரை “நியூ அமெரிக்கா” என மாற்றலாம் என்று டிரம்ப் தெரிவித்த கருத்து மற்றொரு புதிய புயலைக் கிளப்பியுள்ளது. இருப்பினும், இந்த யோசனையை நியூ மெக்சிகோ மாகாண ஆளுநர் மிஷெல் லுஜன் கிரிஷம் உடனடியாகவும் திட்டவட்டமாகவும் நிராகரித்துள்ளார். அமெரிக்கா என்ற ஒரு நாடே உருவாவதற்கு முன்பிருந்தே ‘நியூ மெக்சிகோ’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பெயர் புழக்கத்தில் இருந்து வருவதாக ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புவியியல் சார்ந்த பெயர்களை மாற்ற முயல்வது டிரம்ப் நிர்வாகத்திற்கு இது முதன்முறையல்ல. ஏற்கனவே மெக்சிகோ வளைகுடாவை “கல்ஃப் ஆஃப் அமெரிக்கா” என்று பெயர் மாற்றம் செய்ய அவர் எடுத்த முயற்சியும் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. மேலும், கனடாவுடனான வர்த்தக மோதலின் போது ‘லேக் ஒன்டாரியோ’ ஏரியின் பெயரை மாற்றுவது குறித்துப் பேசியதும், உலகின் மிக முக்கியக் கடல் வழியான ஹார்முஸ் நீரிணைக்கு “டிரம்ப் ஸ்ட்ரெய்ட்” எனப் பெயரிடலாம் எனக் கூறியதும் இந்த வரிசையில் குறிப்பிடத்தக்க சர்ச்சைகளாகும்.
