மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு பெற்றுள்ள பயனாளிகள் மத்தியில், தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டால் மானியம் மற்றும் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படுமா என்ற கவலை எழுந்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக, நாடு முழுவதும் எல்பிஜி (LPG) சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழலில் இது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக வெளியாகியுள்ள விளக்கங்களின்படி, உஜ்வாலா திட்ட பயனாளிகள் மானியம் குறித்து அச்சப்படத் தேவையில்லை எனத் தெரியவருகிறது. கடந்த மாதங்களில் மானிய விலையில் சிலிண்டர் பெற்றவர்களுக்கு இந்த மாதமும் தொடர்ந்து சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். மத்திய அரசு இத்திட்டத்தின் கீழ் சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன் மூலம் தகுதியுள்ள பயனாளிகள் சுமார் 613 ரூபாய் விலையில் சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்ள முடியும்.
தற்போது மானியம் இல்லாத 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலை டெல்லியில் 913 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த 11 மாதங்களில் இல்லாத மிகப்பெரிய விலை மாற்றமாகும். பயனாளிகள் தங்களுக்கு மானியத் தொகை சரியாக வந்து சேருகிறதா என்பதைச் சரிபார்க்க, அந்தந்த எரிவாயு நிறுவனங்களின் (Indane, HP, Bharat Gas) அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தலாம் அல்லது 18002333555 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்போது அதன் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட பிபிஎல் (BPL) அட்டை வைத்திருக்கும் பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். தகுதியுள்ளவர்கள் https://www.pmuy.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது அருகிலுள்ள சிலிண்டர் விநியோகஸ்தர்களை அணுகி ஆஃப்லைன் மூலமாகவோ புதிய இணைப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
