தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சி அமைந்தது முதலே நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழக காவல் துறையில் தற்போது முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடக் ஐபிஎஸ் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் இருந்த கூடுதல் காவல்துறை இயக்குநர் (ADGP) டாக்டர் ஏ. அமல்ராஜ் ஐபிஎஸ் புதிய சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன் வெளியிட்டுள்ள இந்த அதிரடி உத்தரவின்படி, சென்னை கமிஷனராக இருந்த அபின் தினேஷ் மோடக், சென்னை குற்றப்பிரிவு சிஐடி (CB-CID) கூடுதல் காவல்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். தற்போதைய சிபிசிஐடி ஏடிஜிபி டி.எஸ். அன்பு ஐபிஎஸ்-க்கு பதிலாக அவர் இந்தப் பொறுப்பை ஏற்கிறார். இந்த இடமாற்ற உத்தரவுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கமிஷனர் மாற்றம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக டிஜிபி வெங்கடராமன் குடிமைப்பொருள் விநியோக டிஜிபியாகவும், பவானீஸ்வரி ஐபிஎஸ் சிங்கப்பெண் சிறப்பு படை ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வேலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் எஸ்பிக்கள் மற்றும் ஐஜிக்களும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கில் எவ்வித தொய்வும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் இந்த மாற்றங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
