தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இதனிடையே தனது கூட்டணியை திமுக பலமாக வைத்திருந்தாலும் கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்காக அந்தந்த கட்சிகள் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பேனரால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதாவது திருமாவளவனை வருங்கால முதல்வரே என குறிப்பிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேனர் வைத்திருந்தனர். ஏற்கனவே ஆட்சியில் பங்கு கேட்டு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையிடையே இதுபோன்ற தங்களது விருப்பத்தை தெரிவித்து வருவது புதிய பரபரப்பை கிளப்பி உள்ளது.
