தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ₹2,000 ஆக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக இ-சேவை மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பெண்கள் அதிகளவில் திரண்டு வருகின்றனர். இருப்பினும், தற்போது புதிய விண்ணப்பங்கள் எதுவும் பெறப்படவில்லை என்றும், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் குறித்து அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. எனவே, முறையான அறிவிப்பு வரும் வரை பெண்கள் தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்க்குமாறு அரசு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். புதிய விண்ணப்பங்கள் பெறும் தேதியைத் தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; அதுவரை பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
