தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையிலும், இதுவரை நேரடியாகச் செய்தியாளர்களைச் சந்திக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக மீதான விமர்சனங்கள் மற்றும் கொள்கை ரீதியான கேள்விகளுக்குப் பொதுக்கூட்ட மேடைகளை மட்டுமே அவர் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், அவர் அறிமுகப்படுத்தியுள்ளதாகக் கூறப்படும் ‘போலி நேர்காணல்’ (Mock Interview) முறை சமூக வலைதளங்களில் கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது.
இந்த புதிய முறையில், செய்தியாளர்கள் விஜய்யைச் சந்தித்துக் கலந்துரையாடலாம். ஆனால், அந்தப் பதில்கள் வீடியோவாகவோ அல்லது ஆடியோவாகவோ பதிவு செய்யப்படாது. மாறாக, கலந்துரையாடல் முடிந்த பிறகு செய்தியாளர்கள் தங்களுக்குள் விவாதித்து, விஜய்யின் ஒப்புதலுடன் அந்தத் தகவல்களைப் பொதுவெளியில் பகிர வேண்டும். கேள்விகளை எதிர்கொள்ளத் தயங்குவதாலேயே இத்தகைய வினோதமான முறையை அவர் கையாளுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்படும் விஜய், வரும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் வேலூரில் முக்கியப் பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“கேள்விகளை எதிர்கொள்ள எனக்குத் தயக்கமோ, தன்னம்பிக்கைக் குறைவோ இல்லை” என அவர் அந்தப் பேட்டியின் போது கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்தப் பதில்களை நேரடியாக கேமரா முன்னால் நின்று மக்களிடம் சொல்லாமல், செய்தியாளர்கள் வழியாகச் சொல்லச் சொல்வது ஏன் என எதிர்க்கட்சியினரும் நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு நேர்காணலை ‘போலி நேர்காணலாகக் (Mock Interview) கருதிக்கொள்ளுங்கள்’ என்று கூறியதுதான் இந்த கிண்டல்களுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
பேட்டி எடுக்க வந்தவர்களையே, பேட்டி முடிந்த பிறகு மற்றவர்களிடம் பேட்டி கொடுக்கச் செய்வது ‘வரலாறு காணாத நகைச்சுவை’ எனச் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பறக்கின்றன. கேள்விகளுக்குத் தெளிவாகப் பதிலளிக்கும் திறன் இருந்தால், ஏன் நேரடி ஊடகச் சந்திப்பைத் தவிர்க்க வேண்டும் என்ற வாதம் வலுத்து வருகிறது. விஜய்யின் இந்த மறைமுக அரசியல் பாணி, அவருக்கு “பகுதிநேர அரசியல்வாதி” என்ற பிம்பத்தை உறுதிப்படுத்துவதாக விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
