“ஊசி, மாத்திரை எதுவுமே தரல” 2 நாட்களாக நோயாளியை எட்டிப்பார்க்காத டாக்டர்கள்… சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையின் கொடூர அவலம்.. கதறும் பெண்..!!

By Soundarya on ஆனி 12, 2026

Spread the love

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், தீக்காயமடைந்த தங்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனப் பெண் ஒருவர் கண்ணீருடன் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்கமுத்து என்பவரின் மனைவி பிரமு, வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வலிப்பு காரணமாக வெந்து கொண்டிருந்த சாதத்திற்குள் கை விழுந்துள்ளார். இதில் அவரது வலது கையின் மூன்று விரல்கள் கடுமையாகத் தீக்காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக அவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியும், தங்களை மருத்துவர்கள் யாரும் நேரில் வந்து பார்க்கவில்லை எனப் பிரமு வேதனை தெரிவித்துள்ளார். கடுமையான வலிக்கு மருந்து கேட்டால் கூட அங்கிருக்கும் செவிலியர்கள் அலட்சியமாகப் பதிலளிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், “தனியார் மருத்துவமனையில் பார்த்திருந்தாலோ அல்லது வீட்டிலேயே மஞ்சள் அரைத்துப் பூசியிருந்தாலோ கூட இந்நேரம் குணமாகியிருக்கும், இந்த அரசு மருத்துவமனையில் எந்த முன்னேற்றமும் இல்லை” எனத் தன் கையில் ஏற்பட்ட காயத்தைக் காட்டி கண்ணீருடன் புலம்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, அரசு மருத்துவமனையின் அவல நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.