தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், அவருடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து செயல்படும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார். விஜய்யால் தமிழக அரசியலில் தற்போதைக்கு எந்தப் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய நிதின் நபின், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். “விஜய் உடனான கூட்டணி எங்களுக்குத் தேவைப்படாது, அதற்கான அவசியமும் இருக்காது” என்று குறிப்பிட்ட அவர், அதிமுக-பாஜக கூட்டணி மக்கள் மத்தியில் பலமாக இருப்பதாகவும், மேஜிக் எண்களை எட்டி ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்றும் உறுதிபடக் கூறினார்.
விஜய்யைப் பற்றி குறிப்பிடுகையில், அவர் அரசியலுக்குப் புதியவர் என்பதைச் சுட்டிக்காட்டிய நிதின் நபின், பொதுவாகப் புதியவர்கள் அரசியலில் காலடி எடுத்து வைக்கும்போது ஒரு தாக்கத்தை உருவாக்க நீண்ட காலம் எடுக்கும் என்று கூறினார். விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பெரிய எதிர்பார்ப்புகள் நிலவினாலும், அது தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்பதே பாஜகவின் நிலைப்பாடாக உள்ளது.
