“மணிக்கு 38,000 கி.மீ வேகம்.. நெருப்புப் பிழம்புகளுக்கு நடுவே 14 நிமிடங்கள்”.. பசிபிக் கடலில் விழப்போகும் நாசாவின் விண்கலம்.. அந்த 14 நிமிடங்களில் நடப்பது என்ன…?

By Nanthini on சித்திரை 11, 2026

Spread the love

நிலவைச் சுற்றித் தனது வரலாற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த நாசாவின் ‘ஆர்டெமிஸ் 2’ விண்கலம், இன்று அதிகாலை தனது இறுதிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. சுமார் 3.8 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து மணிக்கு 38,367 கிலோமீட்டர் என்ற அசுர வேகத்தில் இந்த விண்கலம் பூமியின் வளிமண்டலத்தை நோக்கிப் பந்து போல உருண்டு வருகிறது. நான்கு விண்வெளி வீரர்களைச் சுமந்து வரும் இந்த விண்கலம், இந்திய நேரப்படி அதிகாலை 5:23 மணிக்கு வளிமண்டலத்திற்குள் நுழைந்து, 5:37 மணிக்கு பசிபிக் பெருங்கடலில் தரை இறங்கும் என நாசா கணித்துள்ளது.

இந்த 14 நிமிடப் பயணமே ஒட்டுமொத்த உலகையும் பதைபதைக்க வைத்துள்ளது. விண்கலம் அதிவேகமாக வளிமண்டலக் காற்றுடன் மோதும் போது ஏற்படும் உராய்வினால் சுமார் 2,700 டிகிரி செல்சியஸ் வெப்பம் உருவாகும். இது இரும்பையே உருக்கக்கூடிய வெப்பம் என்பதால், விண்கலத்தைச் சுற்றி நெருப்புப் பிழம்புகள் சூழ்ந்திருக்கும். விண்கலத்தின் வெப்பத் தடுப்புக் கவசத்தில் ஏற்படும் ஒரு சிறிய குறைபாடு கூட வீரர்களின் உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என்பதால், ஒவ்வொரு வினாடியும் மிகவும் முக்கியமானது.

   

இந்த ‘திக் திக்’ நிமிடங்களின் மற்றொரு சவாலாக தகவல் தொடர்பு துண்டிப்பு (Blackout) அமையும். விண்கலத்தைச் சுற்றியுள்ள கடும் வெப்பப் பிழம்புகளால் ரேடியோ அலைகள் ஊடுருவ முடியாமல் போகும். இதனால் சுமார் 6 முதல் 7 நிமிடங்கள் வரை பூமியில் இருக்கும் நாசா கட்டுப்பாட்டு மையத்திற்கும் வீரர்களுக்கும் இடையேயான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பது தெரியாமல் உலகமே மௌனத்தில் ஆழும் அந்த நிமிடங்கள் தான் விண்வெளிப் பயணத்தின் உச்சக்கட்ட சவாலாகும்.

   

பாதுகாப்பு காரணங்களுக்காக விண்கலத்திற்குள் இருக்கும் சிறிய பொருட்கள் முதல் பெரிய உபகரணங்கள் வரை அனைத்தும் மிகக் கவனமாகப் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன (Packing). அசுர வேகத்தில் வரும்போது ஒரு சிறிய ஸ்பூன் கூட ஒரு ஏவுகணை போல மாறி வீரர்களைத் தாக்கும் அபாயம் இருப்பதால் வீரர்கள் தீவிர எச்சரிக்கையுடன் உள்ளனர். பல லட்சம் மைல்கள் கடந்து வந்தாலும், பாராசூட்கள் சரியான நேரத்தில் விரிந்து பசிபிக் கடலில் அவர்கள் பத்திரமாக இறங்கும் போது மட்டுமே இந்த வரலாற்றுச் சாதனை முழுமையடையும். நான்கு மனித உயிர்களுக்காகவும், அறிவியலின் இந்த மாபெரும் வெற்றிக்காகவும் உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.