“என்னை யாரும் அழைக்கல.. நானும் போகல”…. தவெக மீது நாஞ்சில் சம்பத் கடும் அதிருப்தி… அரசியல் களத்தை அதிரவைத்த ஒற்றை பதிவு….!

By Nanthini on ஐப்பசி 7, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவிலிருந்து விலகி, தளபதி விஜய்யை நேரில் சந்தித்துத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர் நாஞ்சில் சம்பத். அவருக்குக் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதோடு, மாநிலம் முழுவதும் பேச்சாளர்களை உருவாக்கும் முதன்மைப் பொறுப்பும் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலின் போது தவெக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், கட்சியின் முக்கிய முகமாகவே உருவெடுத்தார்.

இருப்பினும், சமீபத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில் நாஞ்சில் சம்பத் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக வெளியிட்ட அதிகாரப்பூர்வப் பிரச்சாரகர்கள் பட்டியலில் நாஞ்சில் சம்பத்தின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், “போனால் போகட்டும் போடா… என்னுடைய பகலை யாரும் இருட்டாக்க முடியாது; என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது” எனத் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை உருவாக்கியது.

   

இப்பதிவு குறித்து நாஞ்சில் சம்பத் அளித்த விளக்கத்தில், தான் அதிருப்தியில் இருப்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார். “கட்சியில் இருக்கும் ஒரே பேச்சாளர் நான் தான் என்பது ஊருக்கே தெரியும் போது, தெரிய வேண்டியவர்களுக்குத் தெரிய வேண்டாமா? இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு என்னை யாரும் அழைக்கவில்லை, அதனால் நானும் போகவில்லை” எனத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தலைமை மீது கொண்ட அதிருப்தியினாலேயே தான் சமூக வலைதளத்தில் அங்ஙனம் பதிவிட்டதாக அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.

   

நாஞ்சில் சம்பத்தின் இந்த ஓரங்கட்டலுக்குக் பின்னால் தவெகவின் கூட்டணி அரசியலே முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக, தவெக ஆதரவு நிலையை வைகோ எடுத்தபோதே, அவருடன் மேடையேற மாட்டேன் என நாஞ்சில் சம்பத் கூறியிருந்தார். தற்போது தவெக அமைத்துள்ள ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி’யில் மதிமுக இணைந்துள்ளதால், வைகோ மற்றும் துரை வைகோவின் கோரிக்கைக்கு இணங்கவே நாஞ்சில் சம்பத்திற்கு உரிய முக்கியத்துவம் மறுக்கப்பட்டு வருவதாகக் கட்சிப் நிர்வாகிகள் இடையே பேச்சுகள் அடிபடுகின்றன.