தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூரின் விமர்சனங்களுக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வாயிலாக மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். மத்திய அரசு தமிழகத்தின் உரிமைகளைப் பறிப்பதாகக் காங்கிரஸ் கூறி வரும் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள அவர், நேரடிக் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் துப்பற்றவர்களே ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பி வருவதாகக் சாடியுள்ளார். மேலும், நேஷனல் ஹெரால்டு உள்ளிட்டப் பல ஊழல் வழக்குகளில் சிக்கி, கடந்த 12 ஆண்டுகளாக அரியணையின் நிழலைக் கூடத் தொட முடியாமல் தோல்விகளையே சந்தித்து வரும் காங்கிரஸாருக்கு யாரைக் குறை கூறவும் தகுதியில்லை என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுகவின் பழைய கூட்டணிப் பழக்கம் மாறாமல், ஒரு ரூபாய் வரிக்கு 29 பைசா என்ற புளித்துப் போன பொய் பிரச்சாரத்தையே காங்கிரஸ் இன்னும் நீட்டி முழக்கிக் கொண்டிருப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் இன்னும் “கோமா” நிலையில் இருந்து மீளவில்லை என்பதை இது காட்டுவதாகக் கூறிய அவர், வேலை நாட்களை 125 ஆகவும், ஊதியத்தை 300 ரூபாய்க்கும் அதிகமாகவும் உயர்த்திய “VB G RAM G” திட்டத்தினை, தற்போதைய புதிய கூட்டணிக் கட்சியான தவெக தலைமையிலான அரசு வரவேற்றுச் செயல்படுத்தி வருவதைக் கூடத் தெரியாமல் காங்கிரஸ் எதிர்த்து வருவதாகக் கேலி செய்துள்ளார்.
வரலாற்றுப் பின்னணிகளைச் சுட்டிக்காட்டி காங்கிரஸின் துரோகப் பட்டியலை நயினார் நாகேந்திரன் அடுக்கிக் காட்டியுள்ளார். கச்சத்தீவைத் தாரைவார்த்துத் தமிழக மீனவர்களை வஞ்சித்தது அன்றைய இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தான் என்பதை நினைவு கூர்ந்துள்ளார். அதுமட்டுமன்றி, எமர்ஜென்சி என்ற பெயரில் மாநிலங்களின் ஜனநாயகக் குரல்வளையை நெரித்ததும், சட்டப்பிரிவு 356-ஐ (Article 356) பயன்படுத்தி 90 முறை மாநில அரசுகளைக் கலைத்துக் கூட்டாட்சித் தத்துவத்தைத் தீயிட்டுக் கொளுத்தியதும் காங்கிரஸ் கட்சி தான் என்றும், அப்படிப்பட்டவர்கள் மாநில உரிமைகளைப் பேசுவது நியாயமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பாக, தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளான காவிரிப் பங்கீடு மற்றும் முல்லைப் பெரியாறு விஷயங்களில் தமிழக மக்களின் உரிமைகளைப் பிற மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்துத் துரோகம் இழைத்தது காங்கிரஸ் கட்சி தான் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். எப்பொழுதெல்லாம் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் காவிரி மற்றும் மேகதாது பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக மக்களுக்கு மீண்டும் எப்படித் துரோகம் செய்யலாம் என உள்ளே சிந்தித்துக் கொண்டு, வெளியே மாநில உரிமைகளைப் பற்றிப் பேசுவது “சாத்தான் வேதம் ஓதுவது” போன்றது எனத் தனது அறிக்கையில் நயினார் நாகேந்திரன் வெளுத்து வாங்கியுள்ளார்.
