தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையையும், அதன் பொறுப்பாளர்களையும் அடியோடு மாற்ற வேண்டும் என்று தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் கே.சி. திருமாறன் ஜி விடுத்துள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை நேரடியாகச் சாடியுள்ள அவர், தமிழக பாஜக தலைமை ஒரு ‘சிண்டிகேட்’ போலச் செயல்படுவதாகவும், இவர்களால் கட்சிக்கு அழிவே தவிர எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். தேசியத் தலைமை உடனடியாக தலையிட்டு இந்த நிர்வாகிகளை மாற்றாவிட்டால், கட்சி இன்னும் 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நீடித்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள திருமாறன், நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்தவும், சனாதன தர்மத்தைப் பாதுகாக்கவும் மட்டுமே தாங்கள் இந்த கூட்டணியில் இணைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தங்களுக்கு எந்தவித சுயநலமோ, ஆதாயமோ இல்லாத நிலையிலும், கூட்டணி தர்மத்தை மதித்து செயல்பட்டதாகக் கூறும் அவர், தற்போதைய மாநிலத் தலைமைக்கு ஒரு கூட்டணியை எப்படி நடத்த வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரிகம் கூடத் தெரியவில்லை என்று சாடியுள்ளார். மேலும், பல்வேறு கட்சிகளுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியவர்களைத் தங்கத் தொட்டிலில் வைத்துத் தாலாட்டும் தற்போதைய தலைமை, தங்களைப் போன்ற உண்மையான சித்தாந்தவாதிகளைத் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய பாஜக மாநிலத் தலைமையின் தவறான அணுகுமுறையால்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் யாரும் வெற்றி பெற முடியாத தொகுதிகளைக் கேட்டுப் பெற்று, நின்ற வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவினர் என்ற கடுமையான குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார். திமுக, அதிமுகவில் இருக்கும் அதிகாரக் கலாச்சாரத்தை பாஜகவிற்குள் இந்தத் தலைமை கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அடிமட்டத் தொண்டன் எப்போதுமே அடிமட்டத் தொண்டனாகவே இருக்க வேண்டும் என இவர்கள் நினைப்பதாகக் கூறியுள்ளார். “தேர்தல் என்று வந்துவிட்டால் தாங்களே நிற்க வேண்டும், கட்சிக்காக உழைப்பவர்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது” என்ற சுயநலச் சித்தாந்தமே தற்போதைய மாநிலப் பொறுப்பாளர்களிடம் மேலோங்கியுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
1991 முதலே இந்து சனாதன தர்மத்திற்காகப் போராடி வரும் தங்களைப் போன்றவர்களின் வரலாறு தற்போதைய தலைமைக்குத் தெரியாது என்று குறிப்பிட்டுள்ள கே.சி. திருமாறன், தன்னை கூட்டணியை விட்டு வெளியேற்றத் தேர்தல் காலத்தில் பல்வேறு இன்னல்களைக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். முக்குலத்தோர் சமுதாயத்தின் பிரதிநிதியாகவும், அனைத்துச் சமூக மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராகவும் விளங்கும் தான், கட்சியின் நலன் கருதி பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, பி.எல். சந்தோஷ் ஆகிய தேசியத் தலைவர்களுக்கு இந்தக் கோரிக்கையை வைப்பதாகக் கூறியுள்ளார். தமிழக பாஜகவின் ஒட்டுமொத்த தலைமையையும் மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர், தாங்கள் கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பதை இனி தேசியத் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் எனத் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
