“அந்த கடிதத்தை” காட்டினால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன்… உங்களால் முடியுமா..? நயினார் நாகேந்திரன் பகிரங்க சவால்…!!

By Soundarya on ஆனி 28, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழக அரசின் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இடையே வெடித்துள்ள நேரடி மோதல் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தான் புதிய மருத்துவக் கல்லூரி அல்லது ஏதேனும் ஒரு கல்லூரி தொடங்குவதற்காக முந்தைய திமுக அரசிடம் விண்ணப்பித்ததாக அமைச்சர் செங்கோட்டையன் கூறிய குற்றச்சாட்டை நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், தனக்கும் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே நீண்ட கால நட்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் காலம் முதலே சம்பந்தம் இல்லாமல் பல விவகாரங்களில் அவராகவே ஆஜராகி மாட்டிக் கொள்வது செங்கோட்டையனின் வழக்கம்” என்று விமர்சித்த நயினார், ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.

   

தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “நான் கல்லூரி தொடங்க விண்ணப்பித்ததற்கான கடிதமோ அல்லது ஆதாரமோ இருந்தால் அதை அமைச்சர் வெளியிடட்டும். அது உண்மையாக இருந்தால் நான் இப்போதே அரசியலை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன்” என்று அதிரடி சவால் விடுத்துள்ளார். மேலும், தனது சவாலை ஏற்கும் விதமாக, தன்னிடம் ஆதாரம் இல்லை என்று நிரூபணமானால் செங்கோட்டையன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.