“11 சென்ட் நிலம்… ரூ.1.38 கோடிக்கு டீல்”…. ரூ.34 லட்சத்தை அசால்ட்டாக சுருட்டிய நபர்…. நேரில் போய் பார்த்ததும் காத்திருந்த நெஞ்சை பதற வைக்கும் உண்மை…..!

By Nanthini on ஐப்பசி 6, 2026

Spread the love

நாகர்கோவிலில் வீடு கட்டுவதற்காகக் குறைந்த விலையில் நிலம் தருவதாகக் கூறி, ரூ.34 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் குளப்பாக்கத்தைச் சேர்ந்த 58 வயதான ஜெயந்தி என்பவர், சென்னையில் வங்கியில் பணிபுரியும் தன் மகளுக்காக நாகர்கோவிலில் நிலம் தேடி வந்துள்ளார். அப்போது அறிமுகமான நடுக்காடு பகுதியைச் சேர்ந்த காந்தி (43) என்பவர், கட்டையன்விளை பகுதியில் உள்ள 11 சென்ட் காலிமனையை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்.

மொத்தம் ரூ.1.38 கோடிக்கு நிலத்தை முடிப்பதாகக் கூறியதை நம்பி, ஜெயந்தி முதற்கட்ட முன்பணமாக ரூ.34 லட்சத்தை ஜிபே மற்றும் RTGS மூலமாக செலுத்தியுள்ளார். பணத்தைக் கொடுத்த பிறகு நிலத்தை நேரில் சென்று பார்வையிட்டபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த நிலம் காந்திக்குச் சொந்தமானதே இல்லை என்பதும், அதன் உண்மையான உரிமையாளர் ஏற்கனவே அதை வேறொருவருக்கு விற்பனை செய்துவிட்டதும் ஜெயந்திக்கு தெரியவந்தது.

   

ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயந்தி தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது, காந்தி பல்வேறு காரணங்களைக் கூறி காலம் தாழ்த்தியதோடு, ஒருகட்டத்தில் அவரை மிரட்டி விரட்டியடித்துள்ளார். இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக இருந்த காந்தியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

   

சொந்தமாக இல்லாத நிலத்தைக் காட்டி லட்சக்கணக்கில் பணத்தைச் சுருட்டிய இச்சம்பவம், நிலம் வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, முன்பணம் கொடுப்பதற்கு முன்பாக நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பதைச் சரிபார்ப்பது அவசியம். தாய் பத்திரம், வில்லங்க சான்றிதழ் (EC) போன்ற சட்டப்பூர்வ ஆவணங்களை முறையாகச் சரிபார்க்காமல் யாரையும் கண்மூடித்தனமாக நம்பி பணத்தைக் கொடுக்கக் கூடாது என்பதற்கு இந்நிகழ்வே சான்றாகும்.