கன்னியாகுமாரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள புரவூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (44). இவர் கடந்த 20 ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், துபாயில் இருந்த சதீஷ் குமாருக்கு ‘தேவிகா எஸ் நாயர்’ என்ற பெயரில் ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் முகநூலில் பிரெண்ட் ரெக்வெஸ்ட் வந்துள்ளது. அதை அவர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, இருவருக்குள்ளும் நட்பாகத் தொடங்கிய உரையாடல், நாளடைவில் காதலாகவும் அந்தரங்க சாட்டிங்காகவும் மாறியுள்ளது.
இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த மர்ம நபர், தங்களின் சாட்டிங் ஹிஸ்டரியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சதீஷ் குமாருக்கு அனுப்பிப் பணம் கேட்டு மிரட்டத் தொடங்கியுள்ளார். அவமானத்திற்குப் பயந்து சதீஷ் குமாரும் பலமுறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் பல லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில், கேரளாவைச் சேர்ந்த ராஜீவ் என்ற நபர் சதீஷைத் தொடர்பு கொண்டு மேலும் பணம் கேட்டு மிரட்டியதோடு, அந்த சாட்டிங் ஸ்க்ரீன் ஷாட்டுகளை சதீஷின் நண்பர்களுக்கும், அவரது மனைவி விஷ்ணு பிரியாவுக்கும் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி, கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் துபாயில் இருந்து ஊர் திரும்பிய சதீஷ் குமார், மனைவியைச் சமாதானப்படுத்த முயன்றும் அவர் பேச மறுத்துவிட்டார். இதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் மற்றும் அவமானம் காரணமாக, கடந்த மே 17 ஆம் தேதி சதீஷ் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்திற்குப் பிறகு அந்த போலி முகநூல் பக்கமும், ராஜீவ் என்பவரின் மொபைல் எண்ணும் முடக்கப்பட்டு மர்ம கும்பல் தலைமறைவாகியுள்ளது. தற்போது, மகனின் மரணத்திற்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து தண்டனை வழங்கக் கோரி சதீஷ் குமாரின் தாய் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
