தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மசாப் டேங்க் பகுதியில் உள்ள ஃபர்ஸ்ட் லான்சர் அடுக்ககத்தில், சஞ்சல்கூடாவைச் சேர்ந்த மிர் சுபியான் அலி (24) என்ற இளைஞர் ஆகஸ்ட் 20 அன்று படுகாயங்களுடன் மீட்கப்பட்டுப் பின்னர் உயிரிழந்தார். சுபியானின் நண்பரான ஷாருக் கான் அளித்த தகவலின்படி, சுபியான் மிரட்டப்பட்டு, தாக்கப்பட்டுக் கட்டடத்தின் 7-வது மாடியில் இருந்து கீழே வீசப்பட்டதாகக் குற்றம் சாட்டுகிறார். ஆனால், மசாப் டேங்க் போலீசார் ஆரம்பக்கட்டத்திலேயே இதனைத் தற்கொலை என அறிவித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் போதைப்பொருட்கள் மற்றும் மதுபானங்கள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அதுகுறித்துப் போதிய விசாரணை நடத்தப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், சிசிடிவி காட்சிகள், அழைப்பு விவரங்கள் மற்றும் தடம் அறிவியல் சான்றுகளை ஆய்வு செய்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அம்ஜத் உல்லா கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
