சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அதிமுகவின் முக்கியத் தலைவர்களிடையே நிலவும் கடும் போட்டி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. வரும் சட்டசபைத் தேர்தலில் இந்தத் தொகுதியை கைப்பற்ற முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் எம்பி ஜெயவர்தன், வைகைச் செல்வன் மற்றும் நிர்மலா பெரியசாமி உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் விருப்பம் காட்டி வருகின்றனர். கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இழந்த இந்தத் தொகுதியை, இம்முறை பாஜகவுடனான கூட்டணி பலத்துடன் மீண்டும் வசப்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் அதிமுகவினர் முட்டி மோதி வருகின்றனர்.
மயிலாப்பூர் தொகுதியில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மிகவும் சிக்கலானதாக உள்ளது. கடந்த 2021 தேர்தலில் திமுகவின் த.வேலு வெற்றி பெற்ற நிலையில், அதிமுகவின் தோல்விக்கு மக்கள் நீதி மய்யம் பிரித்த வாக்குகள் முக்கிய காரணமாக அமைந்தன. தற்போது மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இருப்பதும், புதிதாக தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையும் வாக்குகளைப் பிரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது. மேலும், தொகுதியில் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் மற்றும் பிராமண சமூகத்தினர், மீனவர்களின் வாக்குகள் இம்முறை வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாகப் பார்க்கப்படுகின்றன.
வேட்பாளர் தேர்வில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், மயிலாப்பூர் தொகுதிக்கான இறுதி முடிவு இன்னும் எட்டப்படாமல் உள்ளது. அனுபவம் வாய்ந்த முன்னாள் அமைச்சர்களா அல்லது இளைய தலைமுறையைச் சேர்ந்த ஜெயவர்தன் போன்றவர்களா என்ற குழப்பம் கட்சித் தலைமையிடம் நீடிக்கிறது. ஒவ்வொரு தலைவரும் தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி சீட் பெற முயற்சி செய்து வரும் நிலையில், தொகுதியின் சமூகக் கட்டமைப்பிற்கு ஏற்றவாறு வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரைத் தேர்வு செய்வதே எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய திட்டமாக உள்ளது.
