படம் எடுக்கும்போது உயிரோடு இருந்த கார்த்திக்கின் அப்பா முத்துராமன்.. வெளியாகும்போது இறந்துபோன சோகம்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் முத்துராமன். 60 களிலும் 70 களிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீதர் இயக்கிய நெஞ்சில் ஓர் ஆலயம் படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. திறமையான நடிகராக இருந்தாலும் முத்துராமன் பெரும்பாலும் பல படங்களில் இரண்டாவது ஹீரோவாகவே நடித்தார்.  இவர் நடித்த காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, மூன்று தெய்வங்கள், சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் இன்றும் நினைவில் நிற்பவை.

எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் என பலரோடும் இணைந்து நடித்துள்ளார். 500க்கும் மேறப்ட்ட நாடகங்களிலும் நடித்துள்ளார் முத்துராமன். 1929ம் ஆண்டு 1960 மற்றும் 1970ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முக்கிய மற்றும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து கலக்கியவர். இவருக்கு நவரச திலகம் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.

   

70 களின் இறுதியில் அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் இல்லாத போது வில்லன் வேடத்திலும் துணிந்து நடிக்க ஆரம்பித்தார். ரஜினியின் போக்கிரி ராஜா அவர் அப்படி வில்லனாக நடித்துக் கலக்கிய படத்தில் ஒன்று. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவர் ஊட்டியில் ஒரு படத்தின் ஷூட்டிங்குக்காக சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் போக்கிரி ராஜா படத்தில் அவரைப் போன்ற வேறொருவரை வைத்து மீதமுள்ள காட்சிகளை படமாக்கினார்கள்.

முத்துராமன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் பாரதிராஜா அவரின் மகனான கார்த்தியை வைத்து அலைகள் ஓய்வதில்லை படத்தை இயக்கி வந்தார். தனது மகனின் அறிமுக படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆசையில் இருந்தவருக்கு அந்த ஆசை நிறைவேறவேயில்லை. அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக கார்த்திக் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.