தமிழ் சினிமாவில் உலகத் தரம் வாய்ந்த ஸ்டூடியோ வைத்துள்ள இசை அமைப்பாளர் என்றால் அது ஹாரிஸ் ஜெயராஜ் என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய இசை மற்ற இசை அமைப்பாளர்களை விட வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் தனித்துவமாக இருப்பதால் என்னவோ அவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவரை ரசிகர்கள் அனைவரும் ஹாரிஸ் மாம்ஸ் என அழைக்கிறார்கள். கடந்த 2001 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குனராக அறிமுகமான மின்னலே திரைப்படம் மூலமாகத்தான் ஆரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பாளராக அறிமுகமானார்.
அந்த காலகட்டத்தில் ஏற்கனவே ஏ ஆர் ரகுமான், தேவா மற்றும் யுவன் சங்கர் ராஜா என பலரும் ஜாம்பவான்களாக உயர்ந்து நின்று கொண்டிருக்கும் போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன்னுடைய இசையால் ஹாரிஸ் ஜெயராஜ் திரும்பி பார்க்க வைத்தார். அந்தத் திரைப்படம் தான் இவருடைய முதல் படம் என யாராவது கூறினால் பலரும் அதனை ஏற்க மாட்டார்கள். ஏனென்றால் தன்னுடைய முதல் படத்திலேயே இசையில் ரசிகர்களை வசியப்படுத்தும் அளவுக்கு இசையமைத்திருந்தார். அதன் பிறகு பல இயக்குனர்களுடன் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்து பணியாற்றியுள்ளார். தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
இப்படியான நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் தான் வளர்ந்து வந்த காலத்தில் விஜயின் 10 படங்களுக்கு தொடர்ந்து நோ சொல்லிக் கொண்டு வந்துள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த தகவலை பகிர்ந்து உள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் விஜயின் 10 படங்களுக்கு தொடர்ந்து நோ சொல்லிக் கொண்டு வந்தேன். பதினோராவது படத்தில் தான் நான் கமிட்டானேன். அதற்கு காரணம் ஒரே நேரத்தில் என்னால் பல படங்களில் கவனம் செலுத்த முடியாது. நான் இசையை நெருக்கடியில் உண்டாக்க விரும்பவில்லை. அந்தப் படத்தில் ஒரு பாடல் கொடுக்க வேண்டும் மற்றொரு படத்திற்கு இன்னொரு பாடல் கொடுக்க வேண்டும்.
ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார், அவருக்கு பாடல் கொடுக்க வேண்டும் என நான் கமிட்மென்ட் கொடுத்து விட்டால் அது தண்டனை போல் ஆகிவிடும். அப்படி ஒரு விஷயத்தை என்னால் செய்ய முடியாது. முதன் முதலில் யூத் திரைப்படத்திற்காகத்தான் இசையமைப்பதற்காக இந்த கதையை கேளுங்க என்று என்கிட்ட வந்தாங்க. அதன் பிறகு காவலன் மற்றும் வேலாயுதம் என அடுத்தடுத்து தொடர்ந்து பத்து படங்களுக்கு என்கிட்ட இசையமைப்பதற்காக வந்து கொண்டே இருந்தாங்க. அப்போ என்னால முடியாது என்று சொல்லிட்டு இறுதியாக நண்பன் திரைப்படத்தில் இசையமைக்க அழைத்த போது தான் இதுதான் சரியான நேரம் விஜயுடன் இணைந்து பயணிப்போம் என்று முடிவெடுத்து நண்பன் படத்தில் இசையமைத்தேன் என ஹாரிஸ் ஜெயராஜ் பேசியுள்ளார்.