கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, கோவை விமான நிலையத்தின் பின்புறம் அந்த கொடுமை நிகழ்ந்ததாக இடத்தை தொலைக்காட்சியில் காண்பித்த போது அந்த பெண் மீதும் ஆண் நண்பன் மீதும் கோபம் தான் வந்தது. பகலிலேயே ஆள் நடமாட்டம் இல்லாத திகிலான அந்த இடத்திற்கு இரவு நேரத்தில் அவர்கள் போனது தவறு.
முதலில் அந்த பெண் மீது தவறு. இவ்வளவு தனிமையான இடத்திற்கு எப்படி போகலாம்? பகலில் ஊருக்கு நடுவில் தெருவில் நடந்து போகும்போதே கைப்பேசியை பிடுங்கிக் கொண்டு ஓடுவதும், கழுத்தில் கிடக்கும் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடுவதும் சாதாரணமாகிவிட்ட காலத்தில் இந்த இடத்திற்கு இரவில் எப்படி ஒருவனுடன் சொல்லலாம்? இரண்டாவதாக அந்த பையன் மீது தவறு. அவ்வளவு தனிமையான இடத்திற்கு இரவில் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு போனால் அவளை காப்பாற்ற கூடிய திராணி இருக்க வேண்டும்.
நிச்சயமாக அந்த இடத்தை அவன் தான் அவளுக்கு அறிமுகப்படுத்தி இருக்க முடியும். அவள் இழந்ததை அவன் மீட்டு தர முடியுமா? அந்த மூன்று முட்டாள்களுக்கும் ஆளுக்கு மூன்று நிமிடங்கள் ஒரு அரைகுறை இன்பம் கிடைத்திருக்கும். ஆனால் அவர்களது வாழ்க்கையே முடிந்து போனது. இப்போது இனி அழுது பயனில்லை. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வார்கள். மனம் நொந்து அழுவார்கள். பெற்றோரையும் மற்றவரையும் நேருக்கு நேர் பார்க்க முடியாமல் போகும். அவர்கள் தலை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிமிராது.
இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர் யாரும் சிக்காமல் தப்பிக்கவே முடியாது. மாட்டித்தான் ஆவார்கள். இதை வாசிக்கிறவரில் இதை போன்ற வக்கிர சிந்தனையுள்ளவனும் இருப்பார். எதிர்காலத்தில் இதைப்போல எதையாவது செய்து விட்டு வருத்தப்படாதே. பெண்ணின் நலனை குறித்து கூட நீ சிந்திக்க வேண்டாம். உன் நலனுக்காக இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இரு. நீ சிறையில் தனிமையில் வருந்தி வருந்தி அழுதாலும் உன் வாழ்க்கை உனக்கு திரும்ப கிடைக்காது. தவறான நண்பனை தவிர் என பதிவிட்டுள்ளார்.
