தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ‘தேனிசை தென்றல்’ தேவா, ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு, தமிழ் சினிமாவில் கானா இசையைக் கொண்டுவந்ததற்கான சுவாரஸ்ய பின்னணியை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “இளையராஜாவுக்குப் பிறகு அறிமுகமான 28வது இசையமைப்பாளர் நான். அவருக்கு முன்னால் நிற்க முடியாமல் 27 இசையமைப்பாளர்கள் காணாமல் போயிருந்தனர்.
ஒரு பக்கம் ராஜா, இன்னொரு பக்கம் மேற்கத்திய இசையோடு ஏ.ஆர். ரஹ்மான் என இரு பிரம்மாண்டங்களுக்கு இடையே எனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. கிராமத்து இசை போட்டால் ராஜா சாயல் என்றும், மேற்கத்திய இசை போட்டால் ரஹ்மானைப் பின்பற்றுகிறார் என்றும் விமர்சிப்பார்கள்.
அதனால் தான் என் பால்ய நண்பர்களான அந்தோணி மற்றும் அல்போன்ஸ் மூலம் கானா இசையைக் கற்றுக்கொண்டு, ‘சலோமியோ’ போன்ற பாடல்கள் மூலம் அதை சினிமாவுக்குள் கொண்டு வந்தேன்” என்றார். மேலும், “தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் கதாநாயகர்களைச் சம்மதிக்க வைத்து கானா பாடல்களைப் படத்தில் வைப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை” எனக் குறிப்பிட்ட தேவா, தற்போது மீண்டும் கானா இசை ஒலிப்பதைக் கேட்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறி ஹிப்ஹாப் தமிழா ஆதியை பாராட்டி ஆசி வழங்கினார்.
