கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே தாமரைப்பூ பறிப்பதில் ஏற்பட்ட தகராறில், புதிதாகத் தந்தையான 27 வயது இளைஞர் கவின் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழகப்பபுரம் பேரூராட்சியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்த கவினுக்குத் திருமணமாகி சில நாட்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இச்சூழலில், இந்த வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி உட்பட 4 பேரை அஞ்சுகிராமம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த முன்தினம் இரவு அழகப்பபுரம் மீன்கடைத் தெருவில் கவின் நின்றுகொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த தாமரைப்பூ பறிக்கும் தொழிலாளி சைரஸ் (39) மற்றும் சிலர் அங்கு வந்துள்ளனர். அப்போது அவர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சைரஸ், தான் வைத்திருந்த கத்தியால் கவினைக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த கவின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அன்சூர் நாகர் மற்றும் அஞ்சுகிராமம் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், வட்டக்கோட்டை பகுதியில் பதுங்கியிருந்த சைரஸ் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், லட்சுமிபுரத்தைச் சேர்ந்த செந்தில்நாதன் (40), விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட மாணவரணித் தலைவர் முத்துக்குமார் (36) மற்றும் 18 வயதுடைய பாலிடெக்னிக் மாணவர் ஆகியோருக்கு இக்கொலையில் நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. செங்குளத்தில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாகத் தாமரைப்பூ பறித்து வந்த சைரஸுக்கு, அப்பகுதியில் தெருவிளக்குகளை இயக்கும் பணியில் இருந்த கவினின் நடவடிக்கைகள் இடையூறாக இருந்துள்ளன. குளக்கரையில் தெருவிளக்குகள் எரிந்துகொண்டிருந்ததால் தாமரைப்பூ பறிக்க முடியவில்லை என்பதால், கவினைக் கொலை செய்தால் மட்டுமே தொடர்ந்து தாமரைப்பூ பறிக்க முடியும் எனத் திட்டமிட்டு சைரஸ் இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளமை விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட சைரஸ் உள்ளிட்ட நான்கு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருமணமாகி சில நாட்களே ஆன நிலையில், பச்சிளம் குழந்தையின் முகம்கூட முழுமையாகக் காணாத ஒரு இளம் தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
