விஜயவாடாவில் வெறும் 20 ரூபாய் மதிப்புள்ள குடிநீர் பாட்டிலை எடுக்க முயன்ற குடும்பத் தலைவரை நான்கு பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொன்ற கோரச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவைச் சேர்ந்த உணவக ஊழியரான சாய்குமார் என்பவர், நள்ளிரவில் கடையொன்றில் தண்ணீர் பாட்டிலை எடுக்க முயன்றபோது பிடிபட்டார். அவரைப் பிடித்துக் கொண்ட கடை ஊழியர்கள் இருவர், அருகில் இருந்த மேலும் இருவருடன் சேர்ந்து கொடூரமாகத் தாக்கத் தொடங்கினர்.
“மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர், என்னை விட்டுவிடுங்கள்” என்று அவர் கதறி அழுதபோதிலும், வன்முறைக்கும்பல் சிறிதும் இரக்கம் காட்டவில்லை. அவரது கைகளைக் கட்டி மின் கம்பத்தில் பிணைத்து, சுமார் இரண்டு மணி நேரம் கொடூர சித்திரவதை செய்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட நால்வரையும் கண்காணிப்பு கேமரா ஆதாரங்களின் உதவியுடன் காவல்துறையினர் விரைந்து கைது செய்துள்ளனர்.
