“ரயிலை நிறுத்துங்கடா”…. ஸ்டேஷன்களை தாண்டிய ஏசி ரயிலில் பயத்தில் அலறிய பயணிகள்…. இணையத்தை அலறவிடும் ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 8, 2026

Spread the love

பான்வெல்லில் இருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்திற்கு சென்று கொண்டிருந்த குளிர்சாதன உள்ளூர் ரயிலில் பயணிகள் பீதியடைந்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ரயில் அதன் பாதையில் உள்ள எந்தவொரு ரயில் நிலையத்திலும் நிற்காமல் தொடர்ந்து சென்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ‘மும்பை ரயில் பிரவாசி சங்கம்’ எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த இந்த வீடியோவில், எமர்ஜென்சி இன்டர்காம் மூலம் ஓட்டுநரைத் தொடர்பு கொள்ள பயணிகள் முயல்வதும், பதற்றத்துடன் காணப்படுவதும் பதிவாகியுள்ளது.

பாதுகாப்பு கேள்விகளை எழுப்பும் இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே அதிகாரிகளுக்குப் பயணிகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாகப் பதிவிட்ட ரயில்வே சேவா அதிகாரப்பூர்வப் பக்கம், இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகப் பதிலளித்துள்ளது. மேலும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய இதுபோன்ற சூழல்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

   

இதனிடையே, அந்த ரயில் பயணிகள் சேவைக்கானது அல்ல என்றும், காராஜ் / பணிமனைக்குச் (Car shed) செல்லும் ரயில் என்பதால் நிலையங்களில் நிற்கவில்லை என்றும் சமூக வலைதளப் பயனர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு முன்கூட்டியே செய்யப்பட்ட போதிலும் பயணிகள் ரயிலில் ஏறிவிட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்தத் தகவல் குறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.