“என் அம்மா இன்னும் சாகல… உயிரோடுதான் இருக்காங்க…!” 10 பேருக்கு வாழ்வளித்த மும்பை தாயின் நெகிழ்ச்சி கதை…!

By Swetha on ஆனி 19, 2026

Spread the love

மும்பையைச் சேர்ந்த விஷாகா பரேக் என்ற பெண்மணி, காலில் ஏற்பட்ட ஒரு சிறிய காயம் மற்றும் நரம்பு அடைப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சையின் போது எதிர்பாராதவிதமாக மூளையில் ஏற்பட்ட கடுமையான ரத்தக்கசிவு காரணமாக அவர் ‘மூளைச்சாவு’ அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்தத் திடீர் துயரத்தால் ஒட்டுமொத்த குடும்பமும் நிலைதடுமாறி நின்ற சூழலில், அவரது 32 வயது மகள் ரித்தி பரேக், சமூக அச்சங்களையும் மூடநம்பிக்கைகளையும் கடந்து ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரித்தி உடல் உறுப்பு தானத்திற்குப் பதிவு செய்திருந்தபோது, அவரது தாய் விஷாகா பெருமிதம் அடைந்ததே இந்த இக்கட்டான நேரத்தில் ரித்திக்கு வழிகாட்டியாக அமைந்தது. ஆரம்பத்தில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் உறுப்புகளை எடுப்பதற்கான வசதிகள் இல்லாததால் தயக்கங்கள் எழுந்தன; இருப்பினும் ஆகிய அமைப்புகளின் உறுதுணையோடு விஷாகா உடனடியாக நானாவதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரது சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் மற்றும் எலும்புகள் வெற்றிகரமாகத் தானம் பெறப்பட்டு, 10 நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

   

மரணத்திற்குப் பின் உடல் முழுமையாக இருக்க வேண்டும் என்ற தவறான மதக் கோட்பாடுகளையும், சமூகத் தயக்கங்களையும் உடைத்தெறிந்த பரேக் குடும்பத்தின் இந்த உன்னதப் பயணம், உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்துகிறது. குடும்பத்தினரின் இறுதி எழுத்துப்பூர்வ சம்மதமே ஒருவரின் உறுப்பு தானத்தை சாத்தியமாக்குகிறது என்பதைச் சுட்டிக்காட்டும் இக்கதை, நாம் மறைந்த பிறகும் மற்றவர்களின் வழியே இந்த பூமியில் வாழ முடியும் என்ற உன்னதமான மனிதாபிமானப் பாடத்தைக் கற்பிக்கிறது.