FIR-ல் பெயர் வராமல் இருக்க பல கோடி ரூபாயா?…. ஜெம் கிரானைட்ஸ் வழக்கில் வெடித்த புதிய சர்ச்சை…. கொந்தளித்த வானதி சீனிவாசன்….!

By Nanthini on புரட்டாதி 22, 2026

Spread the love

தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளும், விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி ஏழைச் சிறுமிகளின் வறுமையைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இத்தகைய கொடூரச் செயல்களுக்கு அளிக்கப்படும் கடுமையான தண்டனையே பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உண்மையான நீதியைப் பெற்றுத் தரும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த போக்சோ வழக்கை ஆரம்பத்திலேயே முடித்து வைக்க காவல்துறை முயன்றதாகக் கூறப்படும் சூழலில், சிறப்பு நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே விசாரணை தீவிரமடைந்திருப்பது பல்வேறு கடுமையான கேள்விகளை எழுப்புவதாக வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். மேலும், முதல் தகவல் அறிக்கையில் (FIR) பெயர் சேர்க்கப்படாமல் இருக்க பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மட்டுமன்றி அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் உண்மைகளை மறைக்க முயன்றவர்கள் என அனைவரின் பங்கையும் பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

   

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தனியுரிமையைப் பாதுகாத்து, அவர்கள் அச்சமின்றி சாட்சியமளிக்கத் தேவையான அனைத்துப் பாதுகாப்புகளையும் தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இதில் அரசியல் தலையீடோ, அதிகாரம் மற்றும் செல்வாக்கின் அடிப்படையிலான பாரபட்சமோ இல்லாமல் வழக்கு நேர்மையான முறையில் நடைபெற வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரிய செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.