சினிமாப் பாட்டுக்கு அது முக்கியமில்லை… எம் எஸ் வியின் சக்ஸஸ் சீக்ரெட் இதுதானா?- பிரபலம் பகிர்ந்த தகவல்!

By vinoth on பங்குனி 21, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என இருவரும் கோலோச்சிய 60 கள் மற்றும் 70 களில் முன்னணிப் இசையமைப்பாளராக வலம் வந்தவர் எம் எஸ் விஸ்வநாதன். இருவரின் படங்களுக்கும் முத்து முத்தான பாடல்களைக் கொடுத்த அவர் 80 களின் இறுதிவரை இசையமைத்தார். தன்னுடைய கேரியரில் ஒட்டுமொத்தமாக 1000 படங்களை நெருங்கி இசையமைத்துள்ளார்.

ஆனால் ஆரம்ப காலத்தில் இவர் இன்னொரு முன்னணி இசையமைப்பாளரான ராமமூர்த்தியோடுதான் இணைந்து பணியாற்றினார். இருவரும் பணம் என்ற படத்தின் மூலம் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள். இந்த வெற்றிக்கூட்டணி 10 ஆண்டுகளுக்கு மேல் இணைந்து பணியாற்றியது. விஸ்வநாதனை விட ராமமூர்த்தி மூத்தவர் என்றாலும் அந்த கூட்டணி ‘விஸ்வநாதன் – ராமமூர்த்தி’ என்றே அழைக்கப்பட்டது. இருவரும் ஈகோ இல்லாமல் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்தார்கள்.

   

இதில் விஸ்வநாதன் மெட்டமைப்பது பாடலைக் கேட்டு வாங்குவது போன்ற பணிகளைப் பார்த்துக்கொண்டால், ராமமூர்த்தி வாத்திய கோர்வை மற்றும் ஆர்க்கெஸ்ட்ரா ஆகிய பணிகளைப் பார்த்துக் கொள்வார். இப்படி வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது. இருவரும் பிரிந்த பின்னர் விஸ்வநாதன் பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்தார். ராமமூர்த்திக்கு அந்தளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

   

ஆனால் தனித்துவமான இசையால் விஸ்வநாதன் மெல்லிசை மன்னர் என்ற பெயரோடு தமிழ் சினிமாவில் கோலோச்சினார். இளையராஜா வந்து ஒரு புயலைக் கிளப்பும் வரை தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னராக விளங்கியவர் எம் எஸ் வி. ஆனால் அவருக்கு சினிமா இசை தெரியுமே ஒழிய, ராகங்கள் பற்றி அவ்வளவாக தெரியாது என்ற விமர்சனம் உண்டு.

 

அதற்கு அவரிடம் உதவி இசையமைப்பாளராக பணியாற்றிய இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் பதிலளித்துள்ளார். அதில் “எம் எஸ் வி அண்ணாவைப் பொறுத்தவரை ராகத்தை எல்லாம் பார்க்க மாட்டார். சரணம் ஒரு ராகம் என்றால், பல்லவி ஒரு ராகத்தில் போடுவார். சினிமா பாடலுக்கு அதுதான் சரியாக இருக்கும். கர்நாடக சங்கீதத்தை மற்றும் பின்பற்றினால் அதற்கேற்ற படமாகதான் இருக்கும். கர்ணன் போல ஒரு சில படங்கள்தான் அப்படி அமையும் என்பதே அவரின் கருத்து” எனக் கூறியுள்ளார்.