‘பாவத்தின் சம்பளம்’ முதல் ‘லால் சலாம்’ வரை.. ரஜினி கேமியோ ரோல் பண்ண படங்கள்.. லிஸ்டூ பெருசா போகுதே..

By Archana

Published on:

ஒரு உச்சத்தில் இருக்கும் நடிகர், பிற நடிகர்கள் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வருவது என்பது இப்போது வேண்டுமானால் சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ஒரு நடிகர் அப்படி பிற நடிகரின் படத்தில் நடிக்கிறார் என்றால் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறி விடுவார்கள். ஆனால் உண்மையில் அப்படி நடிப்பதற்கு மிகப்பெரிய மனதும், பெருந்தன்மையும் வேண்டும். அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்த சில படங்களை தற்போது பார்க்கலாம்..

1. லால் சலாம் :

   

ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு உட்பட பலர் நடிப்பில் உருவான படம் லால் சலாம். 09.02.2024-அன்று வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மொய்தீன் பாய் என்ற பெயரில் அவர் நடித்திருந்த அந்தக் கதாபாத்திரம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. 45 முதல் 50 நிமிடங்கள் வரை இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தோன்றுவார்.

2. பாவத்தின் சம்பளம் (1978) :

முதன்முதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த படம் பாவத்தின் சம்பளம். இயக்குநர் துரை இயக்கத்தில் 1978-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில், முத்துராமன், சுமித்ரா, பிரமிளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.

3. அக்னி சாட்சி (1982) :

கே.பாலசந்தர் இயக்கத்தில் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அக்னி சாட்சி. சரிதா, சிவக்குமார், கமல்ஹாசன் உட்பட பலர் நடிப்பில் உருவான இந்தப் படத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். அதேப் போல கமல்ஹாசனும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. பிரஷ்தாச்சார் (1989) :

தமிழைப் போலவே ஹிந்தியிலும் பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். 1989-ம் ஆண்டு மிதுன் சக்ரவர்த்தி, ரேகா கணேசன் உட்பட பலர் நடிப்பில், ரமேஷ் சிப்பி இயக்கத்தில் உருவான பிரஷ்தாச்சார் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

5. கைர் கனூனி (1989) :

அதே 1989-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான திரைப்படம் கைர் கனூனி. பிரக் ராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் கோவிந்தா, ஸ்ரீதேவி, ஷஷி கபூர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் ரஜினிகாந்தும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

6. குசேலன் (2008) :

2008-ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் உருவான படம் குசேலன். பசுபதி, மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஒரு நடிகராகவே நடித்திருப்பார். அசோக் குமார் என பெயர் மாற்றம் மட்டும் செய்யப்பட்டு இருக்கும். இவரோடு சேர்ந்து நடிகை நயன் தாராவும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

7. ரா ஒன் (2011) :

2010-ம் ஆண்டு சிட்டி ரோபோவாக சூப்பர் ஸ்டார் கலக்கி இருந்தப் படம் எந்திரன். இதில் இரட்டை வேடத்தில் ஆராய்ச்சியாளர் மற்றும் ரோபோவாக நடித்து அசத்தியிருந்தார். இதே ரோபோவாக ஹிந்தியில் 2011-ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ரா ஒன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இவைகள் மட்டுமின்றி, தாய் இல்லாமல் நானில்லை (1979 ), நட்சத்திரம்(1980 ), நன்றி மீண்டும் வருக(1982), உறவுகள் மலரலாம் (1983 ), சிவகுமாரின் சஷ்டி விரதம் (1983 ), அர்ஜுனின் நடிப்பில் வெளியான யார் (1985 ), கே.பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் ( 1987 ), ரஜினியின் கதை மற்றும் திரைக்கதையில் வெளியாகி அவரே தயாரித்த வள்ளி (1993 ) உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் ரஜினிகாந்த்.

author avatar
Archana