ரஜினியும் கமலும் சேர்ந்து நடித்து படுதோல்வி அடைந்த படங்கள்.. பிரிய இதுவும் ஒரு காரணமா..?

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் 70 களின் இறுதி ஒரு பொற்காலமாக அமைந்தது. அந்த காலகட்டத்தில்தான் பாரதிராஜா, பாலு மகேந்திரா மற்றும் மகேந்திரன் போன்ற இயக்குனர்கள் தங்கள் எதார்த்தமான கதைசொல்லல் மூலமாக அறிமுகமானார். அதே காலகட்டத்தில் ரஜினி, கமல் ஆகியோர் வித்தியாசமான படங்களில் நடித்து தங்களை கதாநாயகர்களாக நிலைநிறுத்திக் கொண்டனர்.

இதில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து நடித்த பல படங்கள் இன்றளவும் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளிக்கும் படங்களாக அமைந்துள்ளன. முதல் முதலாக இருவரும் அபூர்வ ராகங்கள் படத்தில் இணைந்து நடித்தனர். அந்த படம் வெற்றிப்படமாக அமைய, அடுத்து மூன்று முடிச்சு படத்திலும் இணைந்து நடித்தனர்.

   

இதன் பின்னர் இந்த காம்பினேஷனில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தொடர்ந்து படங்களை எடுக்க விரும்பி இருவரையும் சேர்த்த பல படங்களில் ஒப்பந்தம் செய்தனர். அதனால் அவர்கள், அவள் ஒரு தொடர்கதை, அவள் அப்படிதான், தப்பு தாளங்கள், அலாவுதீனும் அற்புத விளக்கும், நினைத்தாலே இனிக்கும், ஆடுபுலி ஆட்டம் என வரிசையாக நடித்து வந்தனர்.

இதில் கடைசியாக அவர்கள் இணைந்து நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் மற்றும் நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்கள் ரசிகர்களை ஏமாற்றியது. இதனால் இந்த படங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்க வேண்டாம் என்ற முடிவை சேர்ந்து பேசியே எடுத்துள்ளனர். அதன் பின்னர் இருவரும் தங்களுக்கான மார்க்கெட்டை கண்டடைந்து தனித்தனிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தனர்.

ரஜினி முரட்டுக் காளை, நல்லவனுக்கு நல்லவன் என கமர்ஷியல் பாதையில் பயணிக்க ஆரம்பித்தார். கமல்ஹாசன் மூன்றாம் பிறை, நாயகன் போன்ற கதைக்களங்களில் கவனம் செலுத்தினார். அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவேயில்லை. மணிரத்னம் இயக்கத்தில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது. அதே போல ரஜினியின் 2.0 படத்தில் அக்‌ஷய் குமார் நடித்த வில்லன் வேடத்தில் கமல்ஹாசனை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்தது. எதுவும் கைகூடவில்லை.