தலகாட்டா புரம் பகுதியைச் சேர்ந்த உமா தேவி (42) மற்றும் ராமலிங்கப்பா தம்பதியினருக்கு, நீண்ட காலத்திற்குப் பிறகு IVF சிகிச்சை மூலம் மே 5 அன்று இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் பிறந்த சில நாட்களில் உமா தேவிக்கு கடுமையான பிரசவக்கால மனநலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை மனநலப் பாதிப்பின் உச்சத்தில் அவர் தனது பச்சிளம் இரட்டை குழந்தைகளைத் தண்ணீர் வாளியில் மூழ்கடித்துக் கொன்றதுடன், பின்னர் அவற்றைத் தொட்டிலிலும் வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரும் தற்கொலைக்கு முயன்றபோது, வேலை முடிந்து வீடு திரும்பிய கணவர் ராமலிங்கப்பா அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள முடியாது என்றும், அவர்களைக் காப்பகத்தில் விட்டுவிட வேண்டும் என்றும் உமா தேவி அடிக்கடி கூறி வந்ததாகக் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ராமலிங்கப்பா குறிப்பிட்டுள்ளார். மேலும், மனைவியின் தற்போதைய மனநல நிலைமை குறித்தும் அவர் காவல்துறையினரிடம் விளக்கியுள்ளார்.
