ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள குசும்பா கிராமத்தில், தனது மகனின் நீண்ட நாள் உடல்நலக்குறைவை குணப்படுத்த 13 வயது மகளையே நரபலி கொடுத்த தாயின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மார்ச் 24-ம் தேதி ராம நவமி கொண்டாட்டத்தின் போது சிறுமி காணாமல் போன நிலையில், மறுநாள் மூங்கில் காட்டில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. தொடக்கத்தில் இது பாலியல் வன்கொடுமை கொலை என நாடகமாடிய சிறுமியின் தாய் ரேஷ்மி தேவி, பக்கத்து வீட்டுக்காரர் மீது பொய்ப் புகார் அளித்து போலீசாரைத் திசைதிருப்ப முயன்றார்.
இருப்பினும், போலீசாரின் தீவிர விசாரணையில் தாயின் வாக்குமூலத்தில் இருந்த முரண்பாடுகள் உண்மையை வெளிக்கொண்டு வந்தன. குடும்பப் பிரச்சினைகள் தீரவும், மகனின் நோயைக் குணப்படுத்தவும் ஒரு கன்னிப் பெண்ணை நரபலி கொடுக்க வேண்டும் என்று அந்த ஊரைச் சேர்ந்த பெண் சாமியார் சாந்தி தேவி கூறியுள்ளார். இதனை நம்பிய ரேஷ்மி தேவி, தனது காதலர் பீம் ராமுடன் இணைந்து கடந்த மூன்று மாதங்களாகத் திட்டம் தீட்டி, துர்காஷ்டமி நள்ளிரவில் தனது சொந்த மகளையே மூங்கில் காட்டிற்கு அழைத்துச் சென்று நரபலி கொடுத்துள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த காதலர் பீம் ராம், அதற்கு உடந்தையாக இருந்த தாய் ரேஷ்மி தேவி மற்றும் தூண்டுதலாக இருந்த பெண் சாமியார் சாந்தி தேவி ஆகிய மூவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அறிவியல் வளர்ந்த இந்த காலத்திலும், மூடநம்பிக்கையின் பிடியில் சிக்கிப் பெற்ற மகளையே பலிகொடுத்த இந்தச் சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
