ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பழைய ராஜ்கர் பகுதியைச் சேர்ந்த ஷீலா சைனி என்ற பெண், தனது மகள் கரிமாவைக் கொலை செய்த பிறகு, கூர்மையான ஆயுதத்தால் தனது கைகளை வெட்டிக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புவதற்காகக் குடும்பத்தினர் கதவைத் தட்டியபோதுதான் இந்த விபரீதம் வெளிச்சத்திற்கு வந்தது. கதவைத் திறந்தபோது குழந்தை மயங்கிக் கிடப்பதையும், தாய் ரத்த வெள்ளத்தில் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையைச் சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து குழந்தையின் பெரியப்பா சூரஜ் சைனி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். படுகாயமடைந்த தாய் சிகிச்சைக்காக அல்வார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தாயே தனது குழந்தையைக் கொன்று தற்கொலைக்கு முயன்றதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை; இது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
