தெற்கு டெல்லியின் மாளவியா நகர் (Malviya Nagar) பகுதியில் உள்ள ‘லெமன் கிரீன்’ (Lemon Green Restaurant) உணவகம் மற்றும் ‘புளோரிஷ் ஸ்டே’ விடுதி அமைந்திருந்த ஐந்து அடுக்குக் குடியிருப்புக் கட்டிடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விடுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டதால், தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில் இதுவரை வெளிநாட்டுப் பயணிகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளதாக டெல்லி காவல்துறை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
தீ விபத்தின்போது கட்டிடத்திற்குள் சிக்கியவர்கள் அலறியடித்துக் கொண்டு தப்பிக்க முயன்ற நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. கட்டிடத்தில் ஒரே ஒரு நுழைவாயில் மற்றும் வெளியேறும் வழி மட்டுமே இருந்ததாலும், மொட்டை மாடி பூட்டப்பட்டிருந்ததாலும் மக்கள் உள்ளேயே முடங்கினர். குறிப்பாக, தீயின் பிடியில் இருந்து தப்பிக்க ஒரு பெண்ணும் குழந்தையும் கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து கீழே குதிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை உரைய வைத்துள்ளது. எனினும், அருகில் இருந்த கடைக்காரர்களும் உள்ளூர் மக்களும் உடனடியாகச் செயல்பட்டு, சாலையில் மெத்தைகளை விரித்து தப்பியோடிய சுமார் 7 பேரை பத்திரமாக மீட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் 8 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்குப் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டிடத்தின் அடித்தளம் மற்றும் மேல் தளங்களில் சிக்கியிருந்த 40-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு எய்ம்ஸ் (AIIMS) மற்றும் மேக்ஸ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 நிதியுதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
