மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹசோரி கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பெண், தனது 3 வயது மகள் மற்றும் ஒரு வயது மகனுடன் திடீரென காணாமல் போயுள்ளார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு பொதுக் கிணற்றில் மூன்று உடல்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், கிணற்றிலிருந்து தாயின் உடல் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்களையும் மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக அந்தப் பெண் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்குத் தூண்டிய காரணங்கள் குறித்து லத்தூர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒரு குடும்பமே இப்படிப் பரிதாபமாக அழிந்து போனது கிராமத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.
