ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் இச்சாபுரத்தில் பாக்கியலட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். அரசு ஊழியர் ஆன இவருடைய கணவர் இறந்து விட்டதால் தனது மகள் மௌனிகாவுடன் வசித்து வருகின்றார். மௌனிகா அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வரும் நிலையில் வகுப்பிலேயே முதல் மாணவியாக கல்வியில் சிறந்து விளங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மௌனிகா பூப்படைந்து பருவ வயதை எட்டியுள்ளார். பருவ வயது பெண்களுக்கு சமூகத்தில் ஏற்படும் கொடுமையான சம்பவங்களை பார்த்து பயந்து போன பாக்கியலட்சுமி தன்னுடைய மகளை அத்துடன் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக மகளை வீட்டுக்குள்ளேயே பாக்கியலட்சுமி சிறை வைத்துள்ளார். வெளியிடங்களுக்கு செல்லும்போது கூட வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டு தன்னுடைய மகளை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து சென்று விடுவாராம். இருட்டில் இருந்த அந்த சிறுமி தவிர்த்து வருவதை அறிந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பாக்கியலட்சுமி இடம் கேட்டாலும் அவர்களை கடுமையாக பாக்கியலட்சுமி திட்டி விடுவாராம். ஒரு கட்டத்தில் அப்பகுதி அங்கன்வாடி ஊழியர் போலீசாருக்கு இது பற்றி தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியை வீட்டுக்குள் இருந்து மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தற்போது பாக்கியலட்சுமிக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
