முகநூல் காதல் விவகாரத்தில் வங்கதேசத்திற்குச் செல்லத் பணம் தேவைப்பட்டதால், மாமியாரும் மருமகனும் சேர்ந்து கும்பகோணம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை ராஜலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் அழகு நிலையம் நடத்தி வரும் நிலையில், சம்பவத்தன்று வீட்டைப் பூட்டிவிட்டு மனைவியுடன் வெளியே சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
அங்கு படுக்கையறையில் இருந்த இரும்பு பீரோ மற்றும் மேஜையை உடைத்து, அதில் இருந்த 30 பவுன் தங்கம், அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 27 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கும்பகோணம் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சென்னையைச் சேர்ந்த குணசேகரன் (43) என்பவருக்கும், வங்கதேசத்தைச் சேர்ந்த ஹானா பேகம் (59) என்பவரது மகளுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாகி திருமணம் முடிந்துள்ளது தெரியவந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு தனது மகளையும், மருமகனையும் வங்கதேசத்திற்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்ட ஹானா பேகத்திற்கு அதற்கான பயணச் செலவுக்குப் பணம் இல்லாததால், மாமியாரும் மருமகனும் சேர்ந்து இந்தத் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, வங்கதேசத்திற்குத் தப்பிச் செல்வதற்குள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தை வெற்றிகரமாக மீட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் திருவிடைமருதூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குணசேகரனைப் புதுக்கோட்டை சிறையிலும், ஹானா பேகத்தைப் புழல் சிறையிலும் அடைத்தனர்.
