என் மகளுக்கு என்ன ஆச்சோ..? 3 நாள் ஆகியும் கண்டுபிடிக்காத காவல்துறை… எஸ்.பி அலுவலகம் முன்பு அழுது புரண்ட தாய்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

By Swetha on ஆனி 3, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வடக்கு புது தெருவைச் சேர்ந்த கொத்தனார் முத்துக்கருப்பன் என்பவரின் 17 வயது மகள், தற்போது 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு சாயர்புரத்தில் உள்ள கல்லூரியில் உயர்கல்விக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 1-ஆம் தேதி மாலை கடைக்குச் சென்ற இந்த மாணவியை, அவரது தந்தையிடம் முன்பு உதவியாளராக வேலை பார்த்த கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த மணிமுருகன் என்பவர், மேலும் மூன்று பேருடன் சேர்ந்து டாடா இண்டிகா காரில் கடத்திச் சென்றுள்ளார். இந்த மணிமுருகன் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து மாணவியின் தந்தை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் மாணவியைக் காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும், கடத்தல் நடந்து மூன்று நாட்களாகியும் மாணவியைக் கண்டுபிடிக்கவோ, கடத்தலில் ஈடுபட்ட கும்பலைக் கைது செய்யவோ காவல்துறையினர் முறையான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், குற்றவாளி மணிமுருகனின் தொலைபேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

   

காவல்துறையின் தாமதத்தால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று உடனடியாக தங்களது மகளை மீட்டுத் தரக்கோரி மனு அளித்தனர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்பு மாணவியின் தாயும் பாட்டியும், “தங்கள் மகளுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, பயமாக இருக்கிறது” எனக் கூறி கண்ணீர் மல்க தரையில் விழுந்து அழுது புரண்ட சம்பவம் அங்கிருந்தோரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. பட்டப்பகலில் நடந்த இக்கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.