கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் கப்பல் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், தனது மனைவி தமிழ்ச்செல்வியின் தொழில் நிமித்தமாக பியூட்டி பார்லர் அமைத்துக் கொடுத்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் தளம் வழியாக அறிமுகமான த.வெ.க கடலூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரான சிவகுரு என்பவருடன் தமிழ்ச்செல்விக்குத் திருமணத்தைத் தாண்டிய கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த கள்ளக் காதலை அவர்களது ஏழு வயது சிறுவன் தற்செயலாகப் பார்த்துவிட்டதால், இந்த விபரத்தை யாரிடமும் சொல்லிவிடக் கூடாது என மிரட்டி, அச்சிறுவனுக்கு அவர்கள் இருவரும் சேர்ந்து சிகரெட்டாலும் கரண்டியாலும் சூடு வைத்துக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்துள்ளனர்.
இது குறித்துத் தகவலறிந்த தந்தை அருண்குமார், தனது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் சிவகுரு ஆகிய இருவர் மீதும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் கடுமையான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், குற்றவாளிகள் இருவரும் தற்பொழுது தலைமறைவாகியுள்ளனர். மேலும், இந்த விவகாரம் பொதுவெளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் சிவகுருவை அவர் சார்ந்திருந்த தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கட்சியிலிருந்து உடனடியாக நீக்கி அக்கட்சியின் தலைமை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
