மாணவர்களுக்கு மாதம் ரூ.18,000 உதவித்தொகை.. தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு… யாருக்கெல்லாம் கிடைக்கும்?.. முழு விபரம் இதோ..!!

By Muthu Mani on ஆனி 4, 2026

Spread the love

மத்திய மற்றும் மாநில அரசுகள் கல்விக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களையும் உதவித்தொகைகளையும் வழங்கி வருகின்றன. அந்த வகையில், ஐ.டி.ஐ (ITI) படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி மற்றும் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் நோக்கில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (சென்னை) மற்றும் இந்திய அரசின் தென் மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி முகாமை (PM National Apprenticeship Mela) நடத்தவுள்ளன. இம்முகாம் வருகிற ஜூன் 10 அன்று காலை 9.30 மணியளவில் வட சென்னை, ஆர்.கே.நகரில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது.

   

இந்த முகாமில் முன்னணி அரசு மற்றும் தனியார் தொழிற்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் நேரடியாகப் பங்கேற்கவுள்ளன. பல்வேறு தொழிற்பிரிவுகளின் கீழ் பயிற்சி வழங்குவதற்காக ஐ.டி.ஐ படித்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமின்றி, 8, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான இளைஞர்களையும் தொழிற்பழகுநர்களாக (Apprentices) இந்த நிறுவனங்கள் தேர்வு செய்ய உள்ளன.

   

இம்முகாம் மூலம் தொழிற்பழகுநராகத் தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளர்களுக்குத் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate – NAC) வழங்கப்படுவதோடு, மாதாந்திர உதவித்தொகையாகக் குறைந்தபட்சம் 8,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 18,000 ரூபாய் வரை வழங்கப்படும். இதுவரை இப்பயிற்சியை முடிக்காத தகுதியுள்ள நபர்கள் தங்களுடைய கல்விச் சான்றுகளுடன் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து இம்முகாமில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.