பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் 2025-2026ஆம் ஆண்டிற்கான அர்ச்சகர், ஓதுவார், வேதசிவாகம மற்றும் தவில் இசைப் பயிற்சி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் இளநிலை அர்ச்சகர் பயிற்சிக்கு ஓராண்டும், ஓதுவார் பயிற்சிக்கு முழுநேரமாக 3 ஆண்டுகளும் பகுதிநேரமாக 4 ஆண்டுகளும் கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வேதசிவாகம பாடசாலைக்கு 5 ஆண்டுகளும், தவில் இசைப் பயிற்சி நிலையத்திற்கு 3 ஆண்டுகளும் பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சிகளில் சேர அர்ச்சகர், ஓதுவார் மற்றும் தவில் இசைப் பிரிவுகளுக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும், வேதசிவாகம பிரிவிற்கு 5-ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பிரிவிற்கு 14 முதல் 24 வயதிற்குள்ளும், வேதசிவாகம பிரிவிற்கு 12 முதல் 16 வயதிற்குள்ளும், தவில் இசைப் பிரிவிற்கு 13 முதல் 16 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். தேர்வாகும் மாணவர்களில் முழுநேர பயிற்சிக்கு மாதம் ரூ.10,000 மற்றும் பகுதிநேர பயிற்சிக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகையாக பயிற்சி காலம் முடியும் வரை வழங்கப்படும். மேலும், தங்குமிடம், உணவு, உடை மற்றும் மருத்துவ வசதிகள் திருக்கோயில் மூலம் இலவசமாக வழங்கப்படும்.
இப்பயிற்சிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி – 624 601” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிய 6383031350 மற்றும் 9942111960 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
